இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை.
சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
*நன்றி தினமலர்
No comments:
Post a Comment