ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

Thursday, January 6, 2011

மார்கழி திருவாதிரை



திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

பொருளடக்கம்:
1. ஆருத்ரா தரிசனம்
2. சேந்தனார் வரலாறு
3. நோன்பு நோற்கப்படும் முறை


1. ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதை]யில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.

1. 1. ஐதீகக் கதை
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

2. சேந்தனார் வரலாறு
சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

3. நோன்பு நோற்கப்படும் முறை
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.:

"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
சங்சரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்ப சிவாசாரியாரின் மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழிபெயர்த்துள்ளார்.



Thursday, September 2, 2010

தெய்வ தரிசனம்

Saturday, August 21, 2010

பிரதோஷம்





            இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். 

          சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும் . எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.



       ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான். திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ காலமாகும்.




       பொதுவாக வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது மஹாபிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது சனிப் பிரதோஷமாகும்.



      தேவர்களின் துன்பம் போக்க நஞ்சை உண்ட சிவபெருமான், அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ கயிலாய மலையில் பிரதோஷ காலத்தில்தான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனமாடி மகிழ்வித்தார். அதனால் பிரதோஷ காலத்தில் தவறாமல் சிவாலயத்திற்குச் சென்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடமாடும் கோலத்தில் வழிபடுதல் சிறப்பு.
   ஆகவே, பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை சிவாலயத்தில் வழிபடும்போது சோம சூக்த பிரதட்சணம் செய்வது விஷேச பலனைத் தரும்.


    சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்கும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம் என்று பெயர். 

      இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்தால் ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள். 
 "பிரதோஷ வகைகள்"



பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கொடுத்தால் விளையும் பலன்கள் வருமாறு:



  1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
  2. பழங்கள் - விளைச்சல் பெருகும்
  3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
  4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
  5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
  6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
  7. எண்ணெய் - சுகவாழ்வு
  8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
  9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  10. தயிர் - பல வளமும் உண்டாகும்
  11. நெய் - முக்தி பேறு கிட்டும்



Thursday, August 19, 2010

நாகராஜா திருக்கோயில் -- நாகர்கோயில்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நகராட்சியின் முத்திரை சின்னத்திலும் கோயில் முகப்பு இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான நாகராஜாவுக்கென இங்குதான் தனியாக கோயில் உள்ளது.தமிழ்நாட்டின் தென்கோடிக் குமரியில் உள்ள இத்திருக்கோயில் மிகப் பிரசித்தி பெற்றதாகும்.பசுமையான வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இத்திருக்கோயிலைச் சுற்றியும் ஏராளமான நாகப் பாம்புகள் தென்படுவதாக கூறும் உள்ளூர் மக்கள், ஆனால் அவைகள் கடித்து யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர். இச்சிறப்பினை உலக மதங்களின் களஞ்சியமும் உறுதி செய்வதாக இத்திருத்தல விவர ஏடு கூறுகிறது.



திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 



நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர். 
அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கோயிலின் மூலவருக்கு பின்னால் ஓட வள்ளி என்று ஒரு கொடி இருந்ததென்றும், நாளடைவில் அது அழிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் பதியம் செய்து வளர்க்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஓட வள்ளி இலையைத்தான் பிரசாதமாக வழங்கி வந்தனர் என்றும், ஒவ்வொரு இலையும் ஒரு சுவையுடன் இருக்கும் அந்த இலைகள் தொழுநோய் போன்ற கடும் வியாதிகளை குணப்படுத்தக் கூடியது என்றும் கூறுகின்றனர். 

மூலவர் நாகராஜா இருக்குமிடத்தின் மேல் பகுதி (விமானம்) கூரையால் வேயப்பட்டுள்ளது. இது எந்தக் கோயிலிலும் காணப்படாத ஒரு சிறப்பாகும். அது மட்டுமின்றி, மூலவரை சுற்றியுள்ள மண் பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும் என்றும், அதுவே ஆண்டாண்டுக் காலமாக பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தும் இன்றுவரை அங்கு மண் குறையாதிருப்பது அதிசயம்தான் என்றும் கூறுகின்றனர்.
இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன. அவைகளின் மீது மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.

நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம் பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது. 
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் திரளாக வருகை தந்து நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதி செய்து வருகின்றனர்.
நாக தோஷங்களைப் போக்கும் முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.
 
திருவிழாக்கள்: தைப் பூச தேர்த் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமை
,கார்த்திகை மாத திருக்கார்த்திகை நாள்.


.

Tuesday, August 3, 2010

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்




இந்து மதத்திலுள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் ஓர் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது







சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.



அயன், அரி அரன் ஆகிய முப்பெருங் கடவுளரும் இக்கோயிலில் வழிபடப் படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும் அனுமன்: இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிவும் விசேஷம். சிற்பக்கலை சிறப்பு: பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும்.





18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறவிடத்தில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை
                                                                                                                                                     
                                        நன்றி: தினமலர்.




.

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. 
சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.                          


                                                                                                       *நன்றி தினமலர் 

Friday, July 30, 2010

திருப்பதி பாலாஜி காணொளி